
எனது பிள்ளைக்கு நடந்தது இனி வேறு எந்த பிள்ளைக்கும் நடந்துவிடக் கூடாது என்றும், தனது மகளின் மரணம் தொடர்பில் முறையாக விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க்பட வேண்டும் என்று கொழும்பு கொட்டஞ்சேனையில் மாடியொன்றில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 15 வயது மாணவி அம்ஷிகாவின் தாயார் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தற்போது அவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்நிலையில் அண்மையில் டில்சி அம்சிகா என்ற மாணவியின் மரணம் இந்த விடயத்தில் பாரதூரமானதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
குறித்த மாணவி கடந்த வருடத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் பம்பலப்பிட்டி பொலிஸாரால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த மாணவி தனது பாடசாலையில் அதே ஆசிரியர் இருக்கும் நிலையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தில் கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை என்ன? இறுதியில் பெற்றோருக்கு வெள்ளவத்தை பகுதியிலுள்ள குறிப்பிட்ட பாடசாலையில் இருந்து கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பாடசாலைக்கு மாணவியை மாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் தனியார் வகுப்பொன்றில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கதைக்கப்பட்ட நிலையிலேயே இந்த மாணவி இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இவ்வாறான பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வது பாரதூரமான பிரச்சினையாகும். பாடசாலைகளுக்குள்ளேயே மாணவர்கள் இவ்வாறாக பாதிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் இந்த மாணவிக்கு நடந்தவை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.
இதேவேளை மரணமான மாணவியின் தாய் உரையாற்றுகையில் கூறுகையில்,
எனது மகள் இப்போது எங்களிடையே இல்லை. மகள் இந்த நிலைமைக்கு செல்ல அவர் கற்ற பாடசாலையில் ஆசிரியர் ஒருவரே காரணமாக இருந்துள்ளார். மகள் எந்த வகையிலும் மனநோயாளி அல்ல. திறமையான பிள்ளை, அனைத்துக்கும் முன்னால் செல்லக்கூடிய பிள்ளையே.
இவ்வாறானவரை இறுதியில் மனநோயாளி போன்று பாடசாலையில் நடத்தியுள்ளனர். இதனால் அந்தப் பாடசாலைக்கு அனுப்ப முடியாது என்ற காரணத்தால் மகளை அந்தப் பாடசாலையில் இருந்து விலக்கினேன். பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்கி அவளை மீண்டும் வழமைக்கு கொண்டு வந்த போது, தனியார் வகுப்பொன்றில் மகளை அனைவரின் முன்னாலும் எழுப்பி, நீ பொலிஸ் விசாரணையுடன் தொடர்புடைய பிள்ளை, நீ இங்கே இனி வரக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் பிள்ளை மீண்டும் உளவியல் ரீதியில் வீழ்ந்திருந்தார்.
இதனாலேயே அவள் அதிகளவில் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டாள். அவர் புதிய பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அறிந்திருக்காத மற்றைய மாணவர்கள் தனியார் வகுப்பில் நடந்த சம்பவத்தின் பின்னர் அவளிடம் இருந்த ஒதுங்கி, அவளை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் நான் என்ன தப்பு செய்தேன். தவறு செய்தவர்கள் நன்றாக இருக்கையில் தவறு செய்யாத எனக்கு ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று கூறி மிகுந்த கவலையுடன் இருந்தால். அம்மாவாக அவளின் வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். இந்த சமூகத்தில் வாழ பிடிக்கவில்லை என்றே அவள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எனது மகளுக்கு நடந்தது இனி எந்தவொரு பிள்ளைக்கும் நடக்கக்கூடாது. எனது மகளின் மரணம் சமூகத்திற்கு செய்தியொன்றை சொல்லியுள்ளது. அனைவரும் இது தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனி எந்தவொரு பிள்ளைக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.