January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்த தேர்தலில் வாக்களிக்கும் முறையும் வாக்குகள் எண்ணப்படும் முறையும்!

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு தயார்படுத்தியுள்ளது.
225 ஆசனங்களை கொண்ட பாரராளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் 196 பேரே தெரிவு செய்யப்படவுள்ளனர். மிகுதி 29பேரும் அரசியல் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் தேசிய ரீதியிலான வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.
விகிதாசார தேர்தல் முறை
1978 ம் ஆண்டு அரசியலமைப்பானது அதற்கு முன்பிருந்த தேர்தல் தொகுதி முறைமைக்கும் தேர்தல் மாவட்டங்களுக்கும் அடிப்படை மாற்றமொன்றை அறிமுகம் செய்தது. முந்திய முறைமையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட, தனிப்பட்ட வேட்பாளர்களுடன் அல்லது சுயேச்சை வேட்பாளர்களுடன் தேர்தல் தொகுதிகளையும் கொண்டமைந்திருந்தது.
குறிப்பிட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். இம் முறையானது 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பிட்ட 22 தேர்தல் மாவட்டங்களிலுமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையாக மாற்றப்பட்டது.அரசியலமைப்பின் 98(8) உறுப்புரைக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் நிர்ணயம் தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தமாகக் குறித்த தேர்தல் மாவட்டங்களின் வாக்களிப்பின் அடிப்படையில் 196 உறுப்பினர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகம் செய்த, 99 (அ) உறுப்புரை, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் அல்லது சுயேச்சை வேட்பாளர்களால் தேசிய மட்டத்தில் (தேசியப்பட்டியல்) பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட ஏற்பாடு செய்கிறது.இவ்வாறு ஒரே தேர்தலிலேயே நாம் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் ஒரு விகிதாசார முறைமையைக் கொண்டிருக்கிறோம்.
வாக்களிப்பு முறை
வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளருக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலாவதாக, வாக்காளர் தாம் விரும்பும் கட்சி அல்லது சுயேச்சை குழுவின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் புள்ளடியிட்டு வாக்கைப் பதிவுசெய்ய வேண்டும்.பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சி அல்லது சுயேச்சைக்கு சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் வேட்பாளர்கள் மூவருக்கு விருப்பு வாக்கை அளிக்க முடியும். அந்த வேட்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள விருப்பு வாக்கு இலக்கத்திற்கு மேலே புள்ளடிகளை இட்டு விருப்பு வாக்குகளை பதிவு செய்யலாம்.
இதேவேளை ஒரு வேட்பாளருக்கோ அல்லது இரண்டு வேட்பாளர்களுக்கோ தமது விருப்பு வாக்கை பதிவு செய்யவும் முடியும். எனினும் எவருக்கும் தனது விருப்ப வாக்கை செலுத்தாமலும் விடலாம்.ஆனால் ஒன்றுக்கு மேட்ட கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்களுக்கு புள்ளடி இடுதல் அல்லது ஏதேனும் கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கான கட்டத்தில் புள்ளடி இன்றி வேறு அடையாளங்களை இடுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறான வாக்குகள் செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.அதேபோன்று கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு புள்ளடியிட்டு, மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு விரும்பு வாக்குகளுக்கான புள்ளடி இட்டிருந்தால் வாக்கு எண்ணப்படும் போது கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு வழங்கிய வாக்கு எண்ணப்பட்டாலும் வேட்பாளர்களின் விரும்பு வாக்கு எண்ணப்படும் போது அந்த எண்ணிக்கையில் அது சேர்க்கப்படாது.
வாக்கு எண்ணப்படும் முறை
வாக்களிப்புகள் முடிந்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.இதன்போது முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
பின்னர் செல்லுபடியான வாக்குகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். இதனால் அவ்வாறான கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் எவருக்கும் பாராளுமன்றம் செல்ல முடியாது.
இதையடுத்து 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் மொத்த வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும்.
இதேவேளை இந்த கணக்கீட்டின் பின்னர் குறித்த மாவட்டத்துக்காக மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற கட்சிக்கான போனஸ் ஆசனத்தை ஓதுக்கிய பின்னர் வரும் ஆசன எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும்.
இதன்போது கிடைக்கும் எண்ணிக்கையே அந்த மாவட்டத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும். இவ்வேளையில் ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும். பின்னர் ஆசனத்திற்கு தகுதியுடைய கட்சிகள் மற்றும் சுயேச்சைசக் குழுக்கள் பெற்ற வாக்குகளை அடிப்படையாக்க கொண்டு குறிப்பிட்ட கட்சி அல்லது சுயேச்சைக்குழு பெற்ற மொத்த வாக்குகள் ஒரு ஆசனத்திற்கான எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும். இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்திற்கான ஆசனம் எஞ்சியிருக்குமாயின் ஆசனத்திற்கான தகுதியுடைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் மீதமுள்ள வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு அது ஒதுக்கீடு செய்யப்படும்.
விருப்பு வாக்கு எண்ணல்
இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு எவ்வளவு ஆசனங்கள் என்று முடிவான பின்னர், அந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று எண்ணப்படும்.அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கீழாக கூடுதலான வாக்குகளை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்படுவர்.
இதன்படி 196 பேர் மாவட்ட ரீதியில் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுவர்.
தேசியப் பட்டியல் தெரிவு முறை
எஞ்சிய 29ஆசனங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நாடு முழுவதும் பெற்றுள்ள வாக்கு விகிதாசாரங்களுக்கு ஏற்ப பகிரப்படும்.
குறித்த கட்சி அல்லது சுயேச்சைக்குழு நாடு முழுவதும் பெற்ற வாக்குகள் நாடு முழுவதும் செல்லுபடியான வாக்குகளால் வகுக்கப்பட்டு வரும் எண்ணிக்கை 29ஆல் பெருக்கப்பட்டு வரும் எண்ணிக்கை (கட்சி அல்லது சுயேச்சைக்குழு நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகள் /தேர்தலில் அளிக்கப்பட மொத்த வாக்குகள் X 29) கிட்டிய முழு எண்ணிற்கு மட்டம் தட்டப்படும் போது கிடைக்கும் தொகை அந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்குரிய தேசியப் பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கையாகும்.
தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை அந்தந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு பாராளுமன்றத்திற்கு தேவையான 225 உறுப்பினர்களும் தெரிவாகிய பின்னர் அவர்கள் தொடர்பான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும்.