November 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாயக்கட்டையை கண்டு அச்சமடையும் மலையக அரசியல்வாதிகள்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டு பொய்யுரைத்து வந்தவர்கள் தற்போது சுயேட்சைகளைக் கண்டு அச்சம் கொண்டுள்ளார்கள் என்று பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள மலையக ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

தங்களால் முன்நிறுத்தப்பட்டவர்களை மக்கள் நிராகரித்துள்ளதால் தற்போது பிரதிநிதித்துவம் பற்றி பேசி வருகின்றனர். சொந்த சின்னத்தில் போட்டியிட திராணியற்றவர்கள் சுயேட்சைக் குழுக்களை விமர்சிக்கிறார்கள் என்று அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் இம்மக்களுக்காக செய்த சேவைகள் என்ன? அவர்கள் தொடர்ந்தம் வாரிசு அரசியலை முன்னிறுத்தி செயற்படுவதோடு இம்முறையும் அதே பாணியில் வாரிசுகளை களமிறக்கியுள்ளார்கள். அவர்கள் மட்டுமா மலையக மக்களின் பிரதிநிதிகள்? அவர்களிடம் இல்லாத பலமிக்க நபர்களை இன்று சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கியுள்ளன.

அதிலும் குறிப்பாக மலையக ஜனநாயக முன்னணியின் தாயக்கட்டை சின்னத்தில் ஐந்து சட்டத்தரணிகளும், மூன்று அரசாங்க உத்தியோகத்தர்களும், இரண்டு சமூகச் செயற்பாட்டாளர்களும் ஒரு பட்டதாரி மாணவரும் இம்முறை நுவரெலியாவில் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிறந்த ஆளுமையும்இ திறமையும்இ சமூக அக்கறையும் கொண்டு செயற்படுகின்றவர்கள். அவர்களைப் போன்று தொடர்ந்தும் ஒரு குழு ஆட்சியில் இருக்க வேண்டும். நாங்கள் மட்டும்தான் ஆள வேண்டும் என்ற நிலை இன்று மாறியுள்ளது. படித்த மற்றும் சிந்தனை செய்யக்கூடிய சமூகமாக எமது சமூகம் மாறிவிட்டதோடு அவர்கள் தாயக்கட்டையை வெற்றியடையச் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள்.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மலையகத்திலும் ஏற்படும். அது தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவால் இடம்பெறுவதை இவர்களால் தடுக்க முடியாது என்று அந்த முன்னணி தெரிவித்துள்ளது.