January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயண எச்சரிக்கை விடுக்கும் வெளிநாட்டு தூதரகங்கள்: அறுகம்பேவில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (Surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான விபத்து இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், பிரிட்டன் தூதரகம் மற்றும் ரஷ்ய தூதரகம் என்பன தமது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த பகுதிகளுக்கு செல்வது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளன.