November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலை நவம்பர் 14 நடத்த முடியுமா?: உயர் நீதிமன்றத்தில் மனு!

நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” ஏற்பாட்டாளருமான எச். எம். பிரியந்த ஹேரத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுடுள்ளது.

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடையும் ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியுட, ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடைகின்றது.

எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இந்தத் திகதி குறித்த முடிவு மக்களின் இறையாண்மை மீறுவதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.