தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் மீதோ அல்லது மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இதனாலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக களமிறங்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது என்று மலையக ஜனநாயக முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி சண்முகம் ஹெரோசன் குமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் நாங்களும் போட்டியிடுகின்றோம்.
மலையகத்தில் எந்த அரசியல் கட்சிகள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அதேபோன்று தேசிய அளவிலான கட்சிகள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இதனாலேயே சுயேச்சைக் குழுவாக களமிறங்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. எமக்கு மலையகத்தில் இருந்து வெளியேறிய எமது நண்பர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்குகின்றனர்.
நாங்கள் இந்தத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளோம். மிகவும் கவனமாக இந்தத் தேர்தலை கையாள வேண்டிய தேவையுள்ளது. மலையக மக்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களையும் தெளிவூட்ட வேண்டிய தேவை எமக்கு உள்ளது. வாக்களர்கள் சரியான முறையில் தமது வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். எங்களுடையே அணியில் சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் உள்ளனர். இவர்களிடையே மூன்று பெண் வேட்பாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதன்படி இந்தத் தெரிவு சிறந்த தெரிவாக அமையும். நாங்கள் பாராளுமன்றம் செல்வது உறுதியாகியுள்ளன. எந்தக் கட்சிகளும் எங்களுக்கு போட்டியில்லை.
மலையகத்தில் உள்ள கட்சிகளின் ஊடக அறிக்கைகளை பார்க்கும் போது அவர்களிடையே பயம் இருப்பது போன்று தெரிகின்றது. சுயேச்சைக் குழுக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நாங்கள் நுவரெலியாவில் மட்டுமன்றி ஏனைய மலையக மாவட்டங்களின் குரலாக நாங்கள் களமிறங்கியுள்ளோம். சுயேச்சைக்குழு இலக்கம் 11இல் தாயக்கட்டை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம்.
8 பாராளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டவர்களாக நாங்களே இருப்போம். நாங்கள் பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்த மலையக மக்களின் குரலாக ஒலித்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். பாராளுமன்றத்திற்கு நாங்கள் தெரிவு செய்யப்படும் போது எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அந்தக் கட்சிக்கு நல்ல விடயங்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம் என்றார்.