November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”என்னை கைது செய்ய முயற்சி”: கம்மன்பில குற்றச்சாட்டு!

அரச இரகசியம் பேணல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளதால், அதனை தான் வெளியிடுவதற்கு முன்னர் என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளதால், நான் அந்த அறிக்கையை வெளியிட முன்னர் அரச இரகசிய மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு அரச உயர் மட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்சப் போவதில்லை. மக்களுக்கு உண்மைகளை அறிந்துகொள்வதற்காக நான் செயற்படுவேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.