பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமது குழுவினர் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக வடக்கின் பிரதான அரசியல் தலைவரொருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் தன்னை சந்தித்த போது குறித்த அரசியல் தலைவர் இவ்வாறு கூறியதாகவும், அவர்கள் எங்களுடன் இணைந்து செயற்படவிட்டாலும் வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள ஏற்கனவே தயாராகிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தலவதுகொட மொனார்ஜ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை கூறினார்.
அதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி மீது வடக்கிலுள்ள தமிழ் மக்கள், கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் முதலாவதாக அனைத்து இன மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததை விடவும் அதிகளவில் பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். இதேபோன்றே கிழக்கிலும், மலையகத்திலும் மக்கள் நம்பிக்கை வைப்பர். இதனை நாங்கள் நம்புகின்றோம்.
நாங்கள் மொழி, அரசியல் தொடர்பாடல், செயற்பாடுகள் ஆகியவற்றில் நாம் தூரமாக இருக்கின்றோம். இதனால் அவர்களின் மனங்களில் நாங்கள் வெற்றியடையவில்லை. இதனை வெல்லும் தேர்தலாக நாங்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். ஊடக செய்திகள் மற்றும் பழைய அனுபவங்களை காட்டி நாங்கள் வெற்றிப்பெற மாட்டோம் என்றே கூறப்பட்டது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியில் அவர்கள் பெருமளவில் உற்சாகமடைந்துள்ளனர். அவர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
வடக்கின் பிரதான அரசியல் தலைவரொருவர் அண்மையில் எங்களை சந்தித்த போது எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அவரின் குழுவினர் எமது அரசாங்கத்துடன் பணியாற்ற தாயார் என்று கூறினார்.
அவர்கள் எங்களுடன் வேலை செய்யாவிட்டாலும் வடக்கு மக்கள் எங்களுடன் இணைந்து வேலைசெய்ய தயாராகிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் இலங்கையில் நீண்ட அரசியல் வரலாற்றிற்கு பின்னர் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பகுதிகளிலும் சகல இனத்தவர்களும் நம்பிக்கைகொள்ளும் அரசியல் இயக்கமாக நாம் இருக்கின்றோம். இதன்படி வடக்கு, கிழக்கு, மலையகத்தில் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ளும் என்றார்.