January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை”

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பிரச்சினையான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகளை பரீட்சைக்கு முன்னர் கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.