இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ சகோதரர்களும், நாமல் ராஜபக்ஷவும் போட்டியிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுகின்ற போதும், அவரோ, அவரின் சகோதரர்கள் உள்ளிட்ட அவரின் குடும்பத்தை சேர்ந்த எவரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த பாராளுமன்றங்களில் மகிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 2022இல் இடம்பெற்ற ராஜபக்ஷ எதிர்ப்பு மக்கள் போராட்டங்களால் அவர்களின் அரசியல் செயற்பாடுகள் பின்னடைவு கண்டன.
இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கிய நிலையில், அதில் மிகவும் குறைந்தளவாக வாக்குகளே நாடு முழுவதும் கிடைத்தன. அத்துடன் சொந்த மாவட்டத்திலும் நாமல் ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தார்.
இவ்வாறான நிலைமையில் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதை ராஜபக்ஷக்கள் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.
எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷவின் பெயர் மாத்திரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சமல் ராஜபக்ஷவின் மகன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ மாத்திரம் மொனராகலை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுகின்றார்.