மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி, சின்னம் மற்றும் தலைவருடன் இணைந்து பயணிக்க முடியாது என்ற காரணத்தினாலேயே தான் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் தான் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது, அடிக்கடி வடிவேல் சுரேஷ் கட்சித் தாவதுவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
நான் மலையக சமூகத்தை சார்ந்தவன். எனது சமூகத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எனக்கு வண்ணங்கள், சின்னங்கள் பிரச்சினை கிடையாது. எமது மக்களின் எண்ணங்களும் எனது எண்ணங்களும் ஒன்றாக இருப்பதால் என்னால் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரின் நிதிகளை பயன்படுத்தி நாங்கள் எமது மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தியுள்ளோம். அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை அந்த மக்கள் நிராகரித்துள்ளனர். ஜனாதிபதியாக இருந்தவரை மக்கள் நிராகரித்துள்ளனர். இதனால் நாங்கள் தோல்வியடைந்த சின்னத்திலோ, தோல்வியடைந்த கட்சியிலோ அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டவரிடமோ மக்கள் பிரதிநிதிகளாக் இணைவதில் எனக்கு உடன்பாடுகள் கிடையாது. இன்று மக்கள் புதிய பாதையை எதிர்பார்க்கின்றனர். அந்த பாதையை நோக்கி நான் பயணிக்கின்றேன் என்றார்.