மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தின் முன் நிறுத்த தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டில் மறைந்திருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே சட்டப்படியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக கடந்த கால விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள், பாராளுமன்ற விசேட குழுக்கள் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும் அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சட்டப்படியான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என்று இதன்போது அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க இப்போது ஜனாதிபதியாக இல்லை. அவருக்கான விடுபாட்டு சிறப்புரிமை கிடையாது என்பதால் அவரை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜித ஹேரத் கூறியுள்ளார்.