September 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விருப்பு வாக்குகளை எண்ணவும் ஏற்பாடுகள்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதம் கிடைக்காவிட்டால் இரண்டாம், மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகள் எண்ணும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு தேவையான ஆயத்தங்களை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் வாக்களிப்புகள் முடிவடைந்த பின்னர், வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்குள் எடுத்துச் செல்லப்பட்டதும், இரவு 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை இன்று மாலை 4.15 மணியளவில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி முதலாவதாக தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகலாம். இதற்கமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் முதலாவது பெறுபேறு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாளைய தினத்திற்குள் இறுதி முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகளை எண்ண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கு தேவையான ஆயத்தங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் விருப்பத் தெரிவு வாக்குகள் எண்ணும் நிலைமை இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் இம்முறை தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும், மும்முனைப் போட்டி நிலவுவதாலும் விருப்பத்தெரிவு வாக்குகளை எண்ண வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகின்றது.

இவ்வாறான நிலைலமை ஏற்பட்டால் இரண்டாம் மூன்றாம் விருப்ப வாக்குகளை எண்ணி முடிக்க குறிப்பிட்ட காலம் தேவை என்பதனால் யார் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கும் இறுதி முடிவு வெளியாகுவதில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.