ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குப் பதிவு வரையிலான அமைதியான காலப்பகுதியில் சமூக வலைத்தள செயற்பாாடுகள் குறித்து ஆராய தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட இந்தக் குழு, கண்காணிப்பு நிலையங்கள் மூலம் வழங்கப்படும் அறிக்கைகளுக்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படும் போலியான தகவல்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு கணக்கெடுக்கும் நிலையங்களுள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த இடத்திலிருந்து புகைப்படங்கள் எடுப்பது, காணொளிகளை பதிவு செய்வது, ஆயுதங்களை வைத்திருப்பது, புகைப்பிடித்தல், மதுபானம் அறிந்துதல் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.