September 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழரசுக் கட்சியின் முடிவில் மாற்றமா?

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு அவசரமாக கூடவுள்ளது.

வவுனியாவில் நாளை செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கூடவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி வவுனியாவில் கூடிய தமிரசு கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பதாக கூறியிருந்தது.

எனினும், இந்த தீர்மானத்தை மறுத்திருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுநாள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி தேர்தலில் ரணிலி வெற்றிபெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தமிழரசு கட்சியின் சி.சிறீதரன் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்க முடிவுசெய்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரத்தில் கூடிய போது, சிறீதரன் வெளிநாடு சென்றிருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலைமையில் தற்போது நாடு திரும்பியுள்ள சிறீதரன், அது தொடர்பில் நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலவேளை கடந்த வாரம் கட்சி எடுத்த தீர்மானத்தில் நாளைய கூட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கை வெளியிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாளை கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது முடிவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.