November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தில் இருந்து ராஜபக்‌ஷக்களை வெளியேற்றும் ரணில்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்‌ஷ ஆதரவு தரப்பினரை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கும் பிரேமலால் ஜயசேகர, இந்திக அனுருத்த, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் சிறிபால கம்லத் ஆகியோரே இவ்வாறாக இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை தொடர்பில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள ராஜபக்‌ஷ தரப்பினர் இந்த விடயம் குறித்து முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பெரும்பான்மையான எம்.பிக்கள் ஆதரவளிக்கும் நிலையில் 26 எம்.பிக்களே மொட்டு வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவை ஆதரிக்கின்றனர்.

மகிந்த ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, சஷிந்திர ராஜபக்‌ஷ, சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ஜயந்த கெடகொட, சஞ்சீவ எதிரிமான, டீ.வீரசிங்க, யூ.கே சுமித், திஸ்ஸ குட்டியாராச்சி, நிபுண ரணவக்க, டீ.வீ.சானக, இந்திக அனுருத்த, பிரசன்ன ரணவீர, இசுரு தொடங்கொட, காமினி லொகுகே, மர்ஜான் பலில், சிறிபால கம்லத், சரத் வீரசேகர, தேனுக விதானகமகே, சமன்பிரிய ஹேரத், மஞ்சுள வர்ணகுமார, நாலக கொடேகொட, மொஹான் சில்வா மற்றும் சீ.பி.ரத்நாயக்க ஆகியோர் மாத்திரமே நாமல் ராஜபக்‌ஷவை ஆதரிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் ஒன்றிணைந்து பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். இதனை தொடர்ந்தே குறித்த நான்கு இராஜாங்க அமைச்சர்களும் பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.