January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மக்களிடம் அனுர மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் ரணில்!

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகிறார். மாற்றத்திற்காக தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார். அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக் கொள்வோம் என அநுர எச்சரித்தார். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது இங்கு வந்து பொன்சேக்காவுக்கு வாக்களிக்க கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். மஹிந்த ராஜபக்‌ஷ வென்றார்.உங்களை யாராவது தாக்கினார்களா. 2015 இல் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம்.

தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா. 2019 இல் வடக்கு மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள். தெற்கில் கோட்டாவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா. தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். அநுர எப்படி மக்களை அச்சுறுத்த முடியும்.

வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகிறார். அது தான் அவர்களின் போக்கு. அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.
தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும் என்று ரணில் கூறினார்.