ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றம் தேர்வு செய்யப்படும் வரை நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் மூன்று தேர்வுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடன் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி எமது கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு மாற்றப்படும். அதன்பின்னர் புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரையில் நான் உட்பட நால்வர் கொண்ட குழுவுடன், அரசியலமைப்பின் படி அமைச்சரவையை அமைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏற்பாடு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அனைத்து அமைச்சு இலாகாக்களையும் எனது முன்னோட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு வழங்குகிறது. அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் காபந்து அரசாங்கத்தை அமைக்கலாம் என அவர் கூறியுள்ளார்.