January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவின் முடிவு இதுதான்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வௌிவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னொருபோதும் இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தற்போது போன்ற நிலையற்ற தன்மையும் சவாலும் இருந்தது இல்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த பாரதூரமான நிலைமை தொடர்பாக அனைத்து வாக்காளர்களும் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனி நபர் தொடர்பில் அல்லாமல் ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள், கொள்கைகள், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடமுள்ள திட்டங்கள், நடைமுறைகள், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பவர்களின் இயலுமை என்பன குறித்து வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கவும் கல்வி. சுகாதாரம் , விவசாயம். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள், சர்வதேச வர்த்தகம் ஆகிய விடயங்கள் தொடர்பாக முக்கியத்தும் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேர்மை, நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உறுதிமொழி கோரும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சி முறையின் நேர்மை மற்றும் பொறுப்புக் கூறலை கோரி 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான பாரிய மக்கள் போராட்டம் மாற்றத்தை கோரியதை மறக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.