வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை தாம் முன்னெடுப்போம் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் அனுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
4 பிரதான தலைப்புகளின் கீழ் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கலை, கலாச்சாரம், வேலைவாய்ப்பு, மக்கள் உரிமைகள், பொருளாதார அபிவிருத்தி, தேசியப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக 233 பக்கங்களை கொண்டதாக நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
முழு நிறைவான வாழ்க்கை – வசதியான நாடு என்ற தலைப்பின் கீழ் நாகரிகமடைந்த பிரஜை – முன்னேற்றமடைந்த வளம், நோயற்ற வாழ்வு – ஆரோக்கியமான மக்கள், வசதியான வீடு – சுகாதார பாதுகாப்பு மிக்க வாழ்க்கை, வலிமைமிக்க பிரஜை – வெற்றிகரமான மக்கள், உன்னதமான கலாச்சரம் – ஒத்துணர்வுடைய மக்கள், பேணப்பட்ட வரலாறு – உரித்தான புதுமைப்படுத்தல், நிலைபேறான உயிர்சார் உலகம் – என்னும் பசுமையான வாழ்க்கை, சுதந்திரமாள வெகுசன ஊடகத் தொழில் – சமநிலையான தகவல் சமூகமொன்று ஆகிய விடயங்கள் உள்ளளடக்கப்பட்டுள்ளன.
கௌரவமான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு என்ற தலைப்பின் கீழ் பாதுகாப்பான – சமூகமொன்று செறிவுற்ற தேசம், செயற்றிறன் மிக்க ஊழியர் படை – கௌரவமான தொழில்சார் வாழ்க்கை, சுதந்திரமான பால்நிலை சமத்துவம் – நியாயமான மனித அடையாளம், பாதுகாப்பான சிறுவர் உலகம் – படைப்பாற்றல்மிக்க எதிர்கால சந்ததி, மனநிறைவு கொண்ட இளமை – கலாச்சார ரீதியாகவும் அடிமைதளமற்ற சிந்தனை, கௌரவமான மூத்த பிரஜை – அர்த்தமுள்ள ஓய்வுகால வாழ்க்கை, பாதிக்கப்படாத சமூக வாழ்க்கை – நியாயமான சம அணுகல் ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நவீன வாழ்க்கை – செல்வம் கொழிக்கும் நாடு என்ற தலைப்பின் கீழ் சனநாயக ரீதியான பொருளாதாரம் – செல்வம் கொழிக்கும் நாடு, உயர்வான உற்பத்தித் திறன் – உணவு பாதுகாப்புமிக்க நாடு, தரமான கால்நடை உற்பத்தி – தொழில்வாண்மை அணுகல், நிலைபெறுதகு முகாமைத்துவம் – தரமான மீன்வளம், டிஜிட்டல் அரசாளுகை – சர்வதேச பங்காண்மை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அணுகல் – மதிநுட்பம் வாய்ந்த சமூகம், நவீன சுற்றுலாக் கைத்தொழில் – கவர்ந்திழுக்கும் பயணமுடிவிடம், தொழில் முயற்சியாண்மை மேம்பாடு – ஜீவதரணீ அணுகல், நிலைபெறுதகு வளப்பாவனை – உச்ச அளவிலான நன்மை பிறப்பாக்கம், பாதுகாப்பான வலுச்சக்தி கேந்திரம்- நிலைபெறுதகு செலாவணி தோற்றுவாய், பொதுப்போக்குவரத்துச் சேவை – வினைத்திறனமிக்க பயண முடிவிடம், நிலைபெறுதகு கடல் வளம் – உலகலாவிய கடல் தொழிற்றுறையிலான பங்கு, பாதுகாப்பான தரவு – முறைமை தகவல் தொழில்நுட்ப புரட்சி, விளைதிறன்மிக்க முகாமைத்துவம் – ஒருங்கிணைந்த கணினித் திட்டம், விஞ்ஞான ரீதியான நிர்மாணத்துறை – தரமான சேவை ஈடுபாடு ஆகிய விடயங்கள் உள்ளளடக்கப்பட்டுள்ளன.
அபிமானமிக்க வாழ்க்கை – நிலைதளராத நாடு என்ற தலைப்பின் கீழ் புதிய அரசியலமைப்பு -இலங்கை தேசிய ஒருங்கிணைப்பு, வினைத்திறன் மிக்க அரச சேவை – திறமைகளை மையமாகக் கொண்டதொழில்வாண்மை, சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி – சம அணுகல் நீதிமன்ற முறைமை, நட்புமிக்க பொலிஸ் சேவை – மனநிறைவு கொண்ட தொழில்வாண்மை, மனிதத்துவ அடிப்படையிலான சிறைச்சாலை – நீதியான தடுப்பு வாழ்க்கை, போதையற்ற நாடு ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை, உன்னதமான ராஜதந்திர நிலை – தன்னாதிக்கமுள்ள நாடு, உயர்வான தேசிய பாதுகாப்பு – பாதுகாக்கப்பட்ட தேசம், இலங்கை தேசம் – உலகளாவிய பிரஜை ஆகியன தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமது வேலைத்திட்டங்கள் முன்னேற்றமடைந்த இலங்கை பற்றிய கனவுக்கு யதார்த்த வடிவம் கொடுப்பதையே நோக்கமாக கொண்டது என்றும். இதன்படி தமது ஆட்சி மக்கள் கனவை நிறைவேற்றும் ஒரு மறுமலர்ச்சி யுகமாக அமையும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவது எமது தீர்மானகரமானதும் முதன்மையானதுமான பணியாகும். அதனால் எமது கொள்கைத்துறைகள் பல இயற்கை வளங்களை நாட்டுக்குள்ளே தேடிக்கொள்ளக்கூடிய, இலகுவில் முன்னேற்றக்கூடிய, ஏற்கெனவே நாம் கொண்டுள்ள தொழில்சார் மற்றும் பயிற்றப்பட்ட உழைப்பு வளத்தை பாவிக்கக்கூடிய வளங்கள், தகவல் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம். சுற்றுலாக் கைத்தொழில் விவசாயம், கடல் வளங்கள், ஆக்கமுறையான கைத்தொழில்கள் போன்ற பரப்புகள் மீது கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறையை அத்தியாவசியமான பொதுச் சேவைகளாக கருதுகின்ற தேசிய மக்கள் சக்தி, இந்த துறைகளிலான அரச நிதியேற்பாடுகளை அதிகரித்து அந்தத்துறைகளை பலப்படுத்தும் என்றும் கல்வியை அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாக கருகின்ற நாங்கள் பெற்றோர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கல்விச் சுமையை குறைக்க நடவடிககை எடுப்போம். வளங்கள் பகிர்ந்து செல்வதிலான ஏற்றத்தாழ்வு காரணமாக நாடுபூராவிலும் பரவியுள்ள கல்வியின் முரண்பாடுகளை படிப்படியாக ஒழித்துக்கட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், உற்பத்தி பொருளாதாரமொன்றை உருவாக்குகின்ற வேலைத்திட்டத்திற்கு அவசியமான தொழில்வாண்மையாளர்களை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சுகாதாரத் துறையிலான நிதியேற்பாடுகளை அதிகரித்து அந்தத்துறையை பொதுமக்கள் சேவையாக வளர்த்தெடுக்கவும்,. பொதுப்போக்குவரத்தில் அரசாங்கத்தில் பங்கிளை பலப்படுத்துதல் மற்றும் அதனூடாக நாடு பூராவிலும் பகல் மற்றும் இரவு வேளைகளில் அமுலாக்கப்படுகின்ற வினைத்திறன் கொண்ட போக்குவரத்து சேவையை உருவாக்கவும் நடவடிக்கைக எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் மீது சுமத்தியுள்ள நிகழ்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக செயற்பட்டு, இந்த சுமையிலிருந்து கணிசமான பகுதியொன்றை அரசாங்கம் கையேற்றல், முன்னேற்றமடைந்த உற்பத்தி பொருளாதாரத்தில் மக்களுக்கு கிடைக்கின்ற வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சியாலும் வாழ்வதற்கான வசதிகளாலும் இந்த கலாச்சார மனிதனை உருவாக்குவதற்கான அடிப்படை அத்திவாரம் தமது ஆட்சியில் இடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பது 76 வருடகாலமாக படிப்படியாக உக்கிப்போய் சீழ்வடிகின்ற ஊழல் மிக்க அரசியல் கலாச்சாரத்தை முடிவுறுத்துகின்றதும் சாதகமான அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்குவதுமாகும். எங்கள் ஆட்சியின் கீழ் ஊழல் மிக்க பிரபுக்கள் ஆட்சிக் கும்பல்களால் கோடிக்கணக்கான மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்த செல்வத்தை மீண்டும் மக்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்படும். இதற்காக அவசியமான சட்டங்களை ஆக்கியும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவிற்கு, பொலிஸ் மற்றும் சட்டத்துறை தலைமை அதிபதித் திணைக்களத்திற்கு அவசியமான வழிகாட்டல்களை செய்து அவை சுயாதீனமான நிறுவனங்களாக அமுலாவதற்கான முழுமையான இடவசதி எம்மால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அனுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட அரசியல் அதிகாரத்திற்காக மக்கள் குழுக்களை இலக்காகக் கொண்ட கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வெளிக்கொண்டுவந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று பெரிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடக்கம் பாடசாலைக்கு பிள்ளையை சேர்த்துக் கொள்ளல்வரை இடம்பெறுகின்ற அதிகார பிரமிட்டில் மேலிருந்து கீழ்நோக்கி இருக்கும் இலஞ்சம். தரகு பணம் பெறல் உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஊழல்களை நிறுத்துவதற்கான உறுதியான திடசங்கற்பத்துடன் நாங்கள் செயலாற்றுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் தமது அலுவல்களை மக்கள் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அரச நிறுவன கட்டமைப்பொன்றினை அறிமுகம் செய்வது இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகும். ஒரு நாட்டை மீட்டெடுக்கக்கூடிய மன்னன் அல்லது வீரன் பற்றி தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை வைப்பதில்லை என்பதோடு அரச ஆளுகையையும் அபிவிருத்தியையும் ஒரு கூட்டு முயற்சியாகவே காண்கிறது. அதேவேளையில் குறைந்த தகைமைகளைக் கொண்ட அரசியல் அடிவருடிகளுக்குப் பதிலாக தகைமைகளைக் கொண்ட ஆட்கள் குறித்துரைத்த முறைகளின்படி நிறுவனங்களுக்காக நியமிக்கப்படுவதோடு அரசியல் தலையீடுகள் இன்றி அரச நிறுவனங்கள் இயங்குவதற்கான நிலைமை ஏற்படுத்தப்படும். அதேபோன்று நீதித்துறையின் சுயாதீனத்தன்மை முற்றாகவே உறுதிப்படுத்தப்படுவதோடு அநீதிக்கு இலக்காகின்ற பல்வேறு இனக்குழுக்களை பாதுகாப்பதற்கான சட்டங்களைப் போன்றே பாதுகாப்புக்கும் நலனோம்பலுக்கான பொறியமைப்பும் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்கு முன்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என்ற வகையில் பிரிந்திருந்த எம்மை சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை தேசத்தவராக ஒரே கொடியின் கீழ் கொண்டுவர இதுவரை நாட்டை ஆட்சி செய்த பிரபுக்கள் குழுவினருக்கு முடியாமல் போய்விட்டது. அதற்காக அவர்கள் செய்ததோ தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்தந்த இனத்துவங்கள் பிளவுபட்ட குழுக்களாக அவர்களுக்கிடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தி பேணிவருவதாகும். எமது கொள்கைகள் இதற்காக மேற்கொள்ள வேண்டிய எண்ணக்கரு சார்ந்த, பொருண்மையான, கட்டமைப்புச் சார்ந்த மற்றும் முனைப்பான பல இடையீடுகளை இனங்கண்டுள்ளது. அனைத்து இனங்களுக்கும் இலங்கையர் என்ற பொதுவான எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்ற இடவசதி எம்மால் அமைத்துக் கொடுக்கப்படும். உற்பத்தி பொருளாதாரமொன்றை திட்டமிடுவதிலிருந்து நன்மைகள் பகிர்ந்து செல்லும் வரையான செயற்பாங்கில் அனைத்து இனத்தவர்களையும் அதன் பங்காளிகளாக மாற்றிக் கொள்வது எமது திடசங்கற்பமாகும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசியலமைப்புக்கான வரைபு தயாரிக்கப்படுவதுடன், அது பொதுமக்களிடம் சமர்ப்கிக்கப்பட்டு கலந்துரையாடலுக்கு உள்ளாக்கப்பட்டு அவசியமான மாற்றங்களுடன் மக்கள் கருத்துக்கணிப்பில் அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது அரசாங்கத்தில் இலஞ்ச ஊழல்களை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், போதைப்பொருட்களை ஒழிக்கவும், நல்லொழுக்கம் மிக்க சமூகத்தை உருவாக்கவும் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல்போகச்செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரத்தையும் உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.
வடக்குகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்தப்படும். அனைத்து பிரஜைகளும்தமது மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தேசிய மொழிக்கொள்கையொன்று உருவாக்கப்படும் என்பதுடன், வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் படுகொலைகள், காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுதல். இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் காரணமாக இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் செயற்பாட்டினை விரிவாக்குதல் ஆகியனவற்றை செய்வோம் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உள்ளிட்ட அடக்குமுறைசார்ந்த அனைத்துச் சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்த மக்களினதும் சுதந்திரத்தை உறுதிசெய்தல். வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்துதல், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அரசியல் அழுத்தங்களின்றி சகலஇனத்தவர்களுக்கும் நியாயமானவகையில் கிடைக்கக் கூடியதாக தகைமைகளின் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதனை உறுதிசெய்தல்.ஆகியனவற்றை செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்று வகையில் அதிகரித்தல். மக்கள் கௌரவமான வருமானத்தினைப் பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல். வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் கடற்றொழில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை இராஜதந்திர ரீதியாக தீர்த்து, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவோம் என்றும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.
2015-2019 புதிய அரசிலமைப்பொன்றினை தயாரிப்பதற்காக கடைப்பிடித்த செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்து சமத்தவம் மற்றும் சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவனத்திற்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற அரசாளுகைக்கான அனைத்து இனத்தவர்களினதும் அரசியல் பங்காண்மையை உறுதி செய்கின்ற புதிய அரசியலமைப் பொன்றினை தயாரிக்கப்படும்.
இதனுடாக ஒரே நாட்டுக்குள் அனைத்து மக்களையும் ஆட்சியில் தொடர்புபடுத்தக்கூடியவாறு ஒவ்வொர் உள்ளுராட்சி நிறுவனத்திற்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரங்களை உறுதிசெய்தல், தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்று உள்ளுார் அதிகார சபைகள் தேர்தலை ஒரு வருடத்திற்குள் நடாத்தி மக்கள் நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல்போகச்செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரத்தையும் உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.