இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது.
இதற்கு முன்னர் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலாக 2019ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் அமைந்திருந்த போதும், இம்முறை அதனை விடவும் நான்கு வேட்பாளர்கள் அதிகமாக போட்டியிடுகின்றனர்.
இதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்படி, முதலாவதாக 1982ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 6 பேர் போட்டியிட்டதுடன் 1988ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் மூவர் போட்டியிட்டனர்.
அத்துடன் 1994ஆம் ஆண்டில் 6 வேட்பாளர்களும், 1999ஆம் ஆண்டில் 13 வேட்பாளர்களும், 2005ஆம் ஆண்டில் 13 வேட்பாளர்களும், 2010ஆம் ஆண்டில் 22 வேட்பாளர்களும் 2015ஆம் ஆம் ஆண்டில் 19 வேட்பாளர்களும் போட்டியிட்டதுடன் 2019ஆம் ஆண்டில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இம்முறை 40 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியிருந்ததுடன், அவர்களில் 39 பேர் நேற்றைய தினத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து போட்டியில் குதித்துள்ளனர்.