June 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல இடங்களில் வெள்ள அனர்த்தம்: அவிசாவளையில் ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்!

இலங்கையில் பல பிரதேசங்களிலும் நேற்று இரவு முதல் பலத்த மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் களனி கங்கை, நில்வலா கங்கை மற்றும் களுகங்கை ஆகிய ஆறுகளை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறாக அவிசாவளை புவக்பிட்டிய எலிஸ்டன் தோட்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீட்டின் கதவை திறக்க முடியாது போனமையினால் இவர்கள் வெள்ளத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் எஹலியாகொட பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 470 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இதனால் அவிசாவளை, தல்துவ ஆகிய பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.