பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு அறுதிப் பெரும்பான்மையான 113 ஆசனங்கள் கிடைக்காவிட்டால் இணங்கக்கூடிய தரப்பினருடன் இணைந்து ஆட்சியமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று தேசிய மக்கள் சக்தி தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரொன்டோவில் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது, பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க போதுமான ஆசனங்கள் கிடைக்காவிட்டால் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் முதலில் பொதுத் தேர்தல் நடத்தினாலே பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தலில் எங்களுக்கு 113க்கும் குறைவான ஆசனங்கள் கிடைத்தால், குறிப்பாக 10, 15 ஆசனங்கள் எங்களுக்கு கிடைத்தால் மக்கள் எங்களை ஆட்சிக்கு விரும்பவில்லை எதிர்க்கட்சியிலேயே இருக்குமாறு கூறுகின்றனர் என்றே நாங்கள் கருதுவோம். ஆனால் எங்களுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் முயன்றும் எமக்கு 113 ஆசனங்கள் கிடைக்கவில்லை என்ற நிலைமை ஏற்பட்டால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறான நேரத்தில் இணையக்கூடிய மற்றும் இணைக்கக்கூடியவர்களுடன் ஆட்சியை அமைப்போம் என அனுரகுமார தெரிவித்துள்ளார்.