January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் ஆட்டோக்களில் திட்டமிட்டு கொள்ளையிடும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்திலிருந்து தனது மனைவியுடன் கொழும்புக்கு வருகைதந்த இளம் வர்த்தகர் ஒருவர் புறக்கோட்டையில் வைத்து ஆட்டோ சாரதியினால் கடத்தப்பட்டு நகைகள், பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவர் தனது மனைவியுடன் கொழும்பு பம்பலப்பிட்டிக்கு வந்திருந்த நிலையில் வர்த்தக நடவடிக்கைக்காக புறக்கோட்டைப் பகுதிக்கு தனியாக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு கொழும்பை வந்தடைந்தேன்.

மனைவியை பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் மகப்பேற்று மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பின்னர் வர்த்தக அலுவல் ஒன்றுக்காக அன்று பிற்பகல் புறக்கோட்டைப்பகுதிக்குக்கு வந்தேன்.

அங்கு எனது அலுவல்களை முடித்துப் பின்னர் புதிய ஆடைகளையும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் மனைவியிடம் செல்வதற்கு மாலை 6.45 அளவில் தயாரானேன்.

அப்போது புறக்கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் வந்த ஒருவர் என்னை எங்கு போகப் போகிறீர்கள் என்று கொச்சைத் தமிழில் கேட்டார். பம்பலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும் என நானும் கூறினேன்.

பதிலுக்கு அந்த ஓட்டோக்காரரும் ‘வாருங்கள் நான் பாணந்துறைக்குத் தான் போகின்றேன். வழியில் பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுகின்றேன் நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம்’ என்று சொன்னார்.

நானும் நம்பிக்கையாக அவருடைய ஓட்டோவில் ஏறிப் பயணம் செய்தேன்.அங்கிருந்து மருதானை வரும் வரையும் என்னுடன் மிக நட்பாக உரையாடினார். மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் ‘கொஞ்சம் இருங்கள் பியர் வேண்டி வருகின்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களில் பியர் போத்துல் ஒன்றுடன் வந்தார்.
அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிவிட்டு அருகில் நின்றார்.

ஓட்டோக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் என்று என்னை அந்த ஓட்டோக்காரர் கேட்டார்.

எனக்கு சந்தேகம் வந்தது.அதனால் நான் அதற்கு மறுத்தேன். எனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார். நான் அங்கு போக வேண்டும். என்னை பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என அவரிடம் வேண்டினேன். அப்போது அவர் என்னை மிரட்டி அந்த பானத்தை குடிக்க சொன்னார் ஓட்டோவைச் சுற்றி அவரின் கையாட்களான இருவர் அங்கு நின்றதை அவதானித்தேன் .ஆனாலும் நான் மீண்டும் மறுத்தபோது அவர் எனது கழுத்தைப் பிடித்து அந்த பானத்தை பலாத்காரமாகப் பருக்கினார்.

அதன் பின்னர் ஓட்டோவை அவர் பொரளையை நோக்கிச் செலுத்தினார். எனக்கு அருகில் இருவர் ஏறி அமர்த்திருந்ததை நான் உணர்ந்தேன்.பொரள்ளை வரையும் எனக்கு சற்று மயக்கமாக இருந்தது. அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது
மயக்க நிலையில் இருந்த என்னை சனிக்கிழமை அதிகாலை கம்பஹா திவுலுப்பிட்டிய பகுதியில உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் வீதி ஓரமாக தள்ளிவிட்டு ஓட்டோக்காரர்கள் சென்று விட்டனர் ,நான் வீதியில் மயக்க நிலையில் கிடந்ததைக்கண்ட சிலர் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததாக பின்னர் அறிந்தேன்.

அத்துடன் எனது கையில் இருந்த மோதிரம், கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன் .ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டேன் , கடவுச் சொல்லை எப்படி என்னிடமிருந்து பெற்றார்கள் என்று எனக்கு புரியவில்லை மயக்க நிலையில் இருந்த என்னிடம் ஏதோவெல்லாம் கேட்டார்கள் நான் பிதற்றியதை என்னால் கொஞ்சம் உணர முடிந்தது என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி கூறுகையில்,

இரவு எட்டு மணியளவில் வந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற எனது கணவர் இரவு பத்து மணியாகியும் வரவில்லை. தொலைபேசி அழைப்பை எடுத்தாலும் அதற்கும் பதில் இல்லை.
கணவர் ஒருபோதும் எனது தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்காமல் இருக்கமாட்டார். அதுவும் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் நிச்சயமாக குறித்த நேரத்துக்கு வந்திருக்க வேண்டும்.
ஆகவே அவருக்கு ஏதோ நடந்து விட்டது என்ற அச்சத்துடன் நான் அனுமதிக்கப்பட்டிருந்த பம்பலப்பிட்டி மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் கொழும்பில் உள்ள எனக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் உதவி கேட்டேன். நள்ளிரவு என்பதால் பலரும் தயங்கினர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதென்றாலும் என்னால் மருத்துவ மனையை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.அப்படியிருந்தும் இரவிரவாக விழித்திருந்து எனக்குத் தெரிந்த சிலருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அதிகாலை மூன்று மணியளவில் கட்டுநாயக்காவில் உள்ள பணம் எடுக்கும் தானியக்க இயந்திர (ATM) நிலையத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும், பின்னர் இரண்டு தடவைகள் ஐயாயிரம் ரூபாவும் அடுத்தடுத்து எடுக்கப்பட்டமைக்கான குறுஞ் செய்தி எனது தொலைபேசிக்கு வந்தது.இதனால் எனது கணவருக்கு ஏதோ ஆபத்து நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு எனது வங்கி அட்டையின் இலக்கத்தைத் இடைநிறுத்தினேன் .

அடுத்த நாள் அதிகாலை நன்கு தெரிந்த ஒருவருடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்தேன்.கணவரின் தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு கூகுல் வரைபடத்தைப் பெற்ற பொலிஸார் புறக் கோட்டை போஹா சந்தியில் இருந்து மருதானை பொரளையூடாக கட்டுநாயக்கா மீரிகானைக்குச் சென்றிருப்பதாகக் கூறினர். மீரிகானையுடன் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30மணியளவில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து தாதியொருவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் கணவர் என்னுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கினார்.அதனையடுத்து வைத்தியாசலைக்குச் சென்று கணவரைப் பார்வையிட்டேன். பொலிஸாரும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டனர் என்றார்.

இதேவேளை கொழும்பில் சமீபகாலமாக இவ்வாறான கடத்தி பணம்பறிக்கும் சம்பங்கள் இடம்பெறுவதாக தெரிவித்த பொலிஸார் கொழும்புக்கு வரும் மக்களை ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்துவதில் மிகவும் எக்காரிகையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.