
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பியினர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜயசங்கரை சந்தித்துள்ளனர்.
இந்தியாவின் அழைப்பையேற்றே அனுரகுமார தலைமையிலான குழு அங்கு பயணமாகியுள்ளது.
இந்த பயணத்தில் தேசிய மக்கள் சக்தி செயலாளரான வைத்தியர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பேராசிரியர் அணில் ஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவது குறித்தும் மற்றும் பரஸ்பர நன்மைகள் குறித்தும், இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கு இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், இதன்போது இலங்கை – இந்திய உறவுகள் குறித்தும் உறவுகளை மேலும் பலப்படுத்துவதால் ஏற்படக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.