நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் (Online Safety Bill) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் நடத்தப்பட்டு இன்று மாலை அதன்மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியை சேர்ந்த 108 பேர் சட்டமூலத்தை ஆதரித்தும், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 62 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன்படி 46 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் ஊடாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து இணைய செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உள்ளடக்கியதாக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும் இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்தசில கூற்றுக்களின் நிகழ்நிலைத் தொடர்பாடலை தடைசெய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும், தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத நிகழ்நிலைக் கணக்குகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை அமைவிடங்களை அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், நிகழ்வுபற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் இந்த சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்படும்.