ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவையும் நியமிக்க திட்டமிடப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இதுவரையில் அந்தக் கட்சி தீர்மானிக்கவில்லை. எனினும் அந்தக் கட்சிக்குள் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்கள் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தம்மிக்க பெரேராவை நியமிக்கவே ராஜபக்ஷ குடும்பத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமாக இருந்தால் நாமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க அந்தக் கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் நாமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க சிரேஷ்ட உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
பிரதமர் வேட்பாளராவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ முன்னெடுத்து வருவதாகவும், அதற்காக மகிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.