இலங்கையில் பல மாவட்டங்களில் தட்டம்மை நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கடந்த மே மாதம் முதல் 700 இற்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களில் 42 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்
அத்துடன் கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தட்டம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளை இலக்காக கொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை சுகாதார மேம்பாட்டு பணியகம் பரிந்துரைத்துள்ளது.
சுவாசக்குழாய் வழியாக உள்ளீர்க்கப்படும் வைரஸ் உட்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இதன் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், குளிர் மற்றும் கண் சிவத்தல் என்பன பார்க்கப்படுகின்றன.