கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டுவதற்காக அவரின் சகோதரரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டார் என்று ‘மவ்ரட்ட ஜனதா’ கட்சியின் தலைவர் திலீப் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வராமல் இருப்பதற்கே கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்த்தார். ஆனால் பஸில் ராஜபக்ஷ அழுத்தம் கொடுத்து, தனது உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அந்த திருத்தத்தை கொண்டு வரச் செய்தார் என்றும் திலிப் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரரை அந்தப் பதவியில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு பஸில் ராஜபக்ஷ எதிர்பார்க்கவில்லை என்றும், இதனால் பொருளாதார விடயத்தில் தவறான முடிவுகளை எடுத்து செயற்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை பதவி விலக செய்து, தான் ஜனாதிபதியாகும் திட்டத்தில் பஸில் இருந்தார் என்றும், இறுதியில் அவரின் முயற்சி தோல்வியடைந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகும் நிலைமை ஏற்பட்டது என்றும் திலீப் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.