
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த நிலையில், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததுடன், ஆளும் கட்சியிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை அமைச்சுப்பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌஸி, வடிவேல் சுரேஷ் ,அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று வாக்களிக்க பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை.