
கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரினால் தனிபட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். .
இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என்றும், குறித்த விபரத்தில் என்ன சமயத்தவர் என்று கேட்பது தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து அனுப்பவா என்றும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேநேரம் குறித்த பதிவு நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரிடமும் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
கொழும்பில் 90 வீத மக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அதில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் தமிழர்கள் என அனைவரும் இருக்கின்றார்கள். இன்றைக்கு நேற்றோ அல்லது நான் வந்த பிறகோ இந்த பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை. வருடக்கணக்கான இவ்வாறு பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பதிலளித்து கூறினார்.