
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான 10,000 ரூபா சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஓய்வூதியகாரர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை ஜனவரி மாதம் முதலே முழுமையாக வழங்குவது குறித்தும் ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி முன்மொழிந்தார். அதில் 5000 ரூபாவை ஏப்ரல் மாதத்திலும் மீதமுள்ள தொகை அக்டோபரிலும் வழங்க தீர்மானித்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அரச வருமானப் பிரிவின் கூட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உரிய அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பில் ஒரு பகுதியை வழங்கவும், ஜனவரி மாதம் முதல் 5000 ரூபாவும், ஏப்ரல் மாதம் 10,000 ரூபாவும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.