May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பின்னடைவுக்கு பொதுவுடமை பொருளாதாரக் கொள்கையும் காரணம்”

பொதுவுடமை பொருளாதார கொள்கையை பின்பற்றியதால் இலங்கை பொருளாதார ரீதியான பல்வேறு வாய்ப்புக்களை இழந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாக கட்டமைப்பதற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 25 ஆவது ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பாக கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 4 சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

80 ஆம் தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் நாம் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தினோம். அதற்கிடையில் யுத்தம் வந்தமையால் எமது வளங்களை யுத்த வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருந்தது. யுத்தம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அந்த நேரத்தில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பொருட்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் எம்மை கடந்துச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண வரவு செலவுத் திட்ட இடைவெளி, வர்த்தக நிலைமை என்ற இரண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தாக்கம் செலுத்த கூடியவையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.