
நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கிய பொருளாதாரக் கொலையாளிகளை அம்பலப்படுத்தி, வரலாற்றுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், குற்றவாளிகள் இன்னமும் அரச அனுசரணையின் கீழ் சலுகைகளை அனுபவித்து தங்கள் வழமையான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷ,பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நபர்களுக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடவும், குறித்த நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை உடனடியாக நியமித்து, இந்த பொருளாதாரக் கொலைகாரர்களின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்துக்கு ஆளும் தரப்பு உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, எதிர்க்கட்சித் தலைவரின் ஒலிவாங்கியை 4 முறை துண்டித்து ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் இடையூறு செய்துள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரின் கையிலிருந்த கேள்விப்பத்திரத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத் நிஷாந்த பிடுங்கி எடுத்து, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமரவிக்ரமவிடம் கொடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பிரதமர் கூட பார்த்துக்கொண்டிருக்கும் போது இது நடந்தது என்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.