2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 14ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றதுடன், 7ஆம் நாளாக இன்று மாலை 6 மணிக்கு அதன் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாக்கெடுப்பை தொடர்ந்து நாளை முதல் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.