January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் முடிவை எதிர்க்கும் பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்த்துள்ளது.

குறித்த விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்துவிட்டார் என்றும், ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுப் பதவிகளில் ஜனாதிபதி மாற்றங்களை மேற்கொண்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அரசாங்கத்திற்கு பலமாக இருக்கும் எமது கட்சியினரிடம் இருந்த பதவிகளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் வழங்கியமை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தாம் அதிருப்தியில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அதன்போது குறிப்பிட்டுள்ள சாகர காரியவசம், எதிர்காலத்தில் சில தீர்மானங்களை கட்சி எடுக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.