பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி பக்கம் செல்லத் திட்டமிடுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இது தொடர்பில் நாமல் குழு தீர்மானம் எடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அண்மையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் குழுவொன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழுவாக எதிர்க்கட்சி பக்கம் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாமல் ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுப்பது அவர்களின் திட்டமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் அண்மைக் காலமாக அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் குறித்த குழு எதிர்க்கட்சி பக்கம் செல்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நாமல் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கும் பொதுஜன பெரமுனவின் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் வெகு விரைவில் இது தொடர்பில் நாமல் தரப்பினர் தீர்மானமொன்றை எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எவருக்கும் விட்டுக்கொடுக்காது இருக்கும் வகையில் சஜித் அணி திட்டங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.