January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹர்த்தால் போராட்டம்: வடக்கு – கிழக்கு முடங்கின!

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் வடக்கு, கிழக்கில் நில அபகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை மாற்றியெழுதுமாறு அழுத்தம் வழங்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், கிழக்கில் தமிழர்களின் வாழ்விடங்கள், பொருளாதார வளங்கள், மேய்ச்சல் தரைகள் சிங்களக் குழுக்களால் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு வடமாகாண தனியார் ஊழியர்கள், சந்தை வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்துத் துறையினர் எனப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால் வடக்கு, கிழக்கில் பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.