May 25, 2025 9:31:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ரணில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார்!

“ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் – உல் – ஹக் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இன, மத மற்றும் வர்க்க வேறுபாட்டு பிரச்சினைகளுடன் ஒவ்வொருக்கும் இடையிலான வெறுப்புகள், குரோதங்களை தவிர்த்து மனிதாபிமானம் நிறைந்த சமூதாயத்தை கட்டியெழுப்பும் சவாலுக்கு முழு உலகும் முகம்கொடுத்துள்ளமை தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.

இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பாகிஸ்தான் பிரதமரும் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

காசா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதோடு, அது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவும் இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.