November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மயிலதமடு விவகாரம்: ஜனாதிபதி விடுத்த உத்தரவு!

மட்டக்களப்பு – மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், மகாவலி பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு என்பன இந்த நாட்டின் முதுகெலும்பாகும். இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களிலேயே விவசாயம் மேற்கொள்ள மாற்று இட ஒதுக்கீடுகள் வழங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறு மாற்று இடங்கள் வழங்குவதன் ஊடாக பண்ணையாளர்கள், விவசாயிகள் என இருத்தரபினருடைய பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை கால்நடைகளுக்கு உணவுகளை வழங்க தேவையான உதவி தொகைகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.