இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நிலைமை உக்கிரமடைந்து வரும் நிலையில் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று சர்வதேச பொருளாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை போர் நிலைமை தீவிரமடையுமாக இருந்தால் எரிபொருள் விநியோகத்திலும் நிச்சயமற்ற நிலைமை ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் கையிருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், இதன்படி தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை சிறப்பான முகாமைத்துவ முறைக்கு கீழ்ப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் முன்னைய கியூஆர் குறியீட்டு முறைமை மீள ஆரம்பிக்கப்படுவதா அல்லது வேறு நிர்வகிக்கப்பட்ட விநியோக முறைமையை நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பிலும் ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் தற்போது எரிபொருள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும், எதிர்காலத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும் அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.