800 ரூபா பெறுமதியான மிளகு திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்காக அரசுக்கு சொந்தமான எல்கடுவ பிளான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்தினால் 2 கோடியே 74 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாக பாராளுமன்ற கோப் குழுவின் ஊடாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017ஆம் ஆண்டு முதல் 6 வருடங்களில் இந்த தொகை செலவாகியுள்ளதாக கணக்கு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கோப் குழுவில் வெளியானதாக தெரிவிக்கப்படும் தகவல்களின்படி, எல்கடுவ பிலான்டேசன் நிறுவனத்திற்கு சொந்தமான ரத்வத்த தோட்டத்தில் 2017 ஆம் ஆண்டில் தோட்டத்தின் உயர் அதிகாரியொருவரும், காவலர் ஒருவரும் இரண்டு கிலோ மிளகை திருடியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த இருவரும் தோட்ட நிறுவாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த நிலையில் அது தொடர்பான வழக்கு 6 வருடங்களாக மாத்தளை நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்புக்கமைய குறித்த ஊழியர்கள் வெற்றிபெற்றுள்ளதுடன், அவர்களுக்கு தோட்ட நிறுவனத்தால் ஒருவருக்கு 5 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவும் மற்றுமொருவருக்கு 8 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாவும் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சட்டத்தரணி செலவாக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவும் செலுத்தப்படட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை 6 வருடங்களாக நடைபெற்ற குறித்த வழக்கு நடவடிக்கைகளுக்காக எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு மொத்தமாக 2 கோடியே 74 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாக கணக்கு அறிக்கைகள் தெரிவிப்பதாக கோப் குழுவில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.