January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம் – யாழ். பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது!

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்த ‘செரியாபாணி’ அதிசொகுசு பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, நான்கு தசாப்தங்களின் பின்னர் பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுகளைத் தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை படைக்கும் வகையில் இந்தக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

செரியாபாணி பயணிகள் கப்பல் 50 பயணிகளுடன் காங்கேசன்துறையை பிற்பகல் 12.15 அளவில் வந்தடைந்தது.

துறைமுகங்கள், கப்பற்றுறை, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கப்பலை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

கேரளாவின் கொச்சியில் 25 கோடி இந்திய ரூபா செலவில் செரியாபாணி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

14 ஊழியர்களும், 150 பயணிகளும் ஒரு தடவையில் இந்தக் கப்பலில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவர் 50 கிலோகிராம் பொதியை இலவசமாக எடுத்துச்செல்ல முடியும்.

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பலில் பயணிப்பதற்கு ஒருவருக்கு ஒரு வழி கட்டணமாக 27 ஆயிரம் ரூபாவும் இரு வழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படுகின்றது.
மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தது.