ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருந்த போது, புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் அமைச்சரவையினால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட விசேட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபில் தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் 13ஆம் திருத்தத்தை உள்ளடக்கவில்லை என்று அந்தக் குழுவின் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பான நிபுணர்களின் கருத்தாடல் நிகழ்விலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
பௌத்த விவகார செயலணியினால் இந்த கருத்தாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பௌத்த பீடங்களின் பிரதிநிதிகளும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சரத் வீரசேகர, உதய கம்மன்பில உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, நாட்டின் அரசாங்கத்தை விடவும் பலமானதாகவே மாகாண சபைகள் உள்ளன. எமது பாராளுமன்றத்தின் மேலாண்மையையும் இல்லாது செய்தே 13ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் எங்களின் முதல் கடமையாக இந்த பாராளுமன்றத்தை மேலாண்மையான பாராளுமன்றமாக மாற்ற வேண்டும். அங்கு கொண்டு வரப்படும் சட்டங்களே மேலானதாக இருக்க வேண்டும். இந்த கொள்ளையை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்பு வரைபை தயாரித்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மாகாண சபைகளுக்கு தங்களின் பிரதேசங்களுக்கு தேவையான சட்டங்களை தயாரிக்க முடியும். ஆனால் பாராளுமன்றத்தினால் அது தொடர்பில் ஏதேனும் சட்டத்தை விதித்தாலோ, சட்டம் இருந்தாலோ பாராளுமன்றத்தின் சட்டமே மாகாண சபையின் சட்டத்தை விடவும் உயர்ந்ததாக இருக்கும். இதனால்தான் 13ஐ இந்த அரசியலமைப்பு வரைபுக்குள் நாங்கள் உள்ளடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளானது அந்த மாகாணத்திற்குள் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களுடைய ஒத்துழைப்புடனேயே செயற்பட வேண்டும். இதன்படி இந்த மாகாண சபை 13ஆம் திருத்தத்தில் உள்ள மாகாண சபை அல்ல. வேண்டுமென்றால் அதற்கு வேறு பெயரை பயன்படுத்த முடியும் என்று சட்டத்தரணி மனோகர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.