இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தாமும் இலங்கை அரசாங்கமும் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதிபதி, முன்னாள் விமானப்படை தளபதி மற்றும் பிரபல சட்டத்தரணி ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரிகளிடம் விசாரணைகளை நடத்தும் பொறிமுறையொன்று உள்ளது என்றும், ஆனால் சர்வதேச விசாரணையை நாங்கள் செய்ய மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.