இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.
யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருந்த நிலையில் முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள அவரது வீட்டிற்குத் சென்ற கிரிக்கெட் வீரர் தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.