November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க முடிவு

கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்தியஸ்தானத்தினால் (IADRC) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டில் மாற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தானம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதன்
தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆரம்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் காணப்படும் சாதக நிலைமை முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த சட்டத்தின் ஊடாக முதலீட்டுச் சபையை, பிரச்சினைகளுக்கு செயல்திறனுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் மாற்று பிரச்சினைகளை தீர்பதற்கான மத்தியஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் போட்டித்தன்மை மிக்க எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும்
புளொக்செயின், பசுமை வலுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறையில் சிறப்பம்சங்களை உருவாக்க ஒன்றுபடுமாறு சட்ட வல்லுநர்களிடத்தில்
கேட்டுக்கொண்டுளார்.