வீட்டுப் பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்ற இளம் பெண்ணொருவர் வயிற்றில் கொங்கிரிட் ஆணிகளுடன் நாடு திரும்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தான் பணியாற்றிய வீட்டில் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், உணவுக்கு பதிலாக அவர்கள் தன்னை ஆணிகளை விழுங்கச் செய்தாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறான கொடுமைக்கு முகம்கொடுத்துள்ளனர்.
குடும்ப பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த வருடம் ஜூன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் ஊடாக வீட்டுப் பணிப்பெண்ணாக இந்தப் பெண் சவூதி அரேபியா சென்றுள்ளார்.
அங்கே தான் பணியாற்றும் வீட்டில் இருப்பவர்கள் தன்னை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், உணவும் கொடுக்காது தாக்கியுள்ளதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
தான் இது தொடர்பில் தனது தாயாருக்கு தொலைபேசி ஊடாக கூறி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு முகவரகத்திற்கு தெரியப்படுத்திய பின்னர் தன்னை கொடூரமாக தாக்கி 5 கொங்கிரிட் ஆணிகளை விழுங்கச் செய்துள்ளதாகவும், அத்துடன் கம்பி சுருள் ஒன்றையும் விழுங்க பணித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் வயிற்று வலியுடன் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியபோது, வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், இதன்போது வைத்தியர்கள் தனது வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதை அறிந்துகொண்டதாகவும் பெண் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்தியர் ஒருவர் முன்வந்து பொலிஸாரின் ஊடாக தூதரக அலுவலகத்திற்கு அறிவித்து தன்னை சவூதி வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதித்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரேயில் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளுடன் வத்தேகம பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.