ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் செல்லும் போது கொள்ளைகளில் ஈடுபடும் குற்றக் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடும் குறித்த கும்பல் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களின் சாரதிகள் போன்றோ அல்லது வாடகை வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் போன்றோ இருந்து கொள்ளைகளில் ஈடுபடுவதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை வாகனத்தின் சாரதி போன்று இருந்து தமது வாகனங்களில் தனிமையில் பயணிப்பவர்களுடன் நட்பாக பேசி, குளிர்பானம் போன்றவற்றை குடிக்கக்கொடுத்து பயணியை மயக்கமடையச் செய்து அவர்களின் பணம், நகைகள் மற்றும் பெருமதியான பொருட்களை கொள்ளையிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
அதேபோன்று வாடகைக்கு வாகனங்களில் பயணிக்கும் பயணி போன்று இருந்து சாரதியுடன் நட்பாக பேசி, அவருக்கு குளிர்பானத்தை குடிக்கொடுத்து சாரதியை மயக்கமடைய செய்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கொள்ளையர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.