உலக நாடுகளில் பரவிவரும் நிபா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நிபா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எதுவும் விமான நிலையத்திலோ, துறைமுகத்திலோ முன்னெடுக்கப்படாதிருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் ஏற்கனவே நாட்டுக்குள் குறித்த வைரஸ் நுழைந்திருக்கலாம் என்றும், இது குறித்து சுகாதார தரப்பினர் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையிலும் பெருமளவானவர்கள் இங்கே வருகின்றனர். எமது மீனவர்களுடன் அவர்கள் தொடர்புகளை பேணுகின்றனர். அங்கிருந்து பொருட்களும் கொண்டுவரப்படுகின்றன. இதனால் எமக்கு தெரியாமல் ஏற்கனவே இங்கே வைரஸ் நுழைந்திருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நுழையலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நோய் நிலைமை முற்றிய பின்னர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை நடத்திய பின்னரே இந்த வைரஸ்தான் தொற்றியுள்ளது என்று கண்டுபிடிக்கப்படுகின்றது. இதனால் இந்த வைரஸ் தொடர்பில் நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.